Tuesday, February 21, 2012

மாசு :- பூமியை அச்சுறுத்தும் ஆபத்து


மாசு :- பூமியை அச்சுறுத்தும் ஆபத்து

பூமியை அச்சுறுத்தும் மாசு என்னும் அரக்கனிடமிருந்து நம் பூமி பந்தை காப்போம் .

சுற்றுப்புறச் சூழல் மாசு உருவாக்கியிருக்கும் மிகப்பெரிய சவால் உலக
வெப்பம் அதிகரிப்பு என்று உலக நாடுகள் ஒத்துக் கொண்டிருக்கின்றன.
பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பது என்பது ஏதோ ஒரு காலநிலைச் செய்தி போல
வாசித்து கடந்து போக வேண்டியதல்ல. இது மிகப்பெரிய மாற்றங்களை பூமியில்
ஏற்படுத்தி மனித குலத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாய் உருமாறிவிடும்.

1995க்குப் பிறகு பூமியின் வெப்பம் பெருமளவுக்கு அதிகரித்திருக்கிறது.
இது பூமியின் சாதாரண வெப்ப அளவின் விகிதத்தை பெருமளவுக்கு மீறியிருப்பது
கவலைக்குரிய செய்தி. நீராவி, கரியமில வாயு, ஓசோன், மீத்தேன், நிட்ரஸ்
ஆக்சைடு போன்றவற்றின் அளவு பூமியில் அதிகரித்திருப்பது பூமியின் வெப்ப
அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். காடுகளை அழிப்பதும், எரிபொருட்களின்
வெப்பமும் பூமியின் வெப்ப நிலை ஏற்றத்துக்கு இன்னும் சில காரணங்கள்.

முதலாவதாக உலக வெம்மை அதிகரிப்பினால் கடல் மட்டம் உயரும். கடல் மட்டம்
உயர்வதனால் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் மூழ்கிப் போகும் அபாயம் உண்டு.
பங்களாதேஷ், நெதர்லாந்து, இங்கிலாந்தின் சில பகுதிகள் தாழ்வாக
இருப்பதனால் முதல் பாதிப்பு அடையும் வாய்ப்பு இருப்பதாகவும்
ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
வெப்பம் சீராக இல்லாமல் அதிகரிப்பது இயல்பாய் நடந்து கொண்டிருக்கும்
காலநிலையை முற்றிலும் சிதைத்து விடுகிறது. வெள்ளப் பெருக்கு, வெப்ப
அலைகள் பூமியில் வீசுதல், சூறாவளி போன்ற பல இயற்கைச்சீற்றங்களுக்கும் இது
காரணமாகி விடுகிறது.

தென் துருவப் பகுயில் வானில் விழுந்துள்ள ஓசோன் ஓட்டை இன்னொரு மிகப்பெரிய
அச்சுறுத்தலாக விளங்குகிறது. காற்றில் ஏற்படும் மாசு
(குளோரோபுளூரோகார்பன்) இதன் முக்கிய காரணியாக விளங்கும் அதே நேரத்தில்
குளிர்சாதனப் பெட்டி, பிரிட்ஜ், தானியங்கி விற்பனை இயந்திரங்கள்
போன்றவற்றிலிருந்து வெளியாகும் வாயுவும் இந்த ஓசோன் ஓட்டைக்கு
குறிப்பிடத்தக்க காரணமாக விளங்குவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பூமியைப் பாதுகாக்கும் ஓசோன்
படலம் வலுவிழப்பதால் தோல் புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள் மனிதனுக்கு
வருகின்றன. தொடர்ந்து ஓசோன் படலம் வலுவிழந்தால் பூமியில் மனிதர்கள் உட்பட
உயிரினங்களே அழிந்து போகும் என்பது அதிர்ச்சித் தகவல்.

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பது சாதி, மத, இன, மொழி, நாடு
வேறுபாடுகளற்று மனிதகுலம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகவும்
முக்கியமான ஒன்றாகும். இவற்றை தவறவிடும் ஒவ்வொரு தருணங்களிலும் பூமியின்
ஆயுளைக் குறைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

அன்றாடம் நிகழ்த்தும் சிறு சிறு செயல்களின் மூலம் நமது சுற்றுப்புறத்தைக்
காக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு.

பொதுவிடங்களில் குப்பைகளைச் சேர்க்காமல் குப்பைத் தொட்டியில் குப்பைகளைப்
போடுதல். பொதுவிடங்களில் தேவையற்றவற்றை எரித்து காற்றை மாசுப்படுத்துதல்,
தண்ணீரை தேவையற்ற விதத்தில் தேங்க விடுதல், கழிவு நீர் தேங்குமிடங்களில்
அடைப்புகள் ஏற்படுத்துதல், போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

1970களில் சிப்கோ இயக்கம் இந்தியாவில் நடைபெற்றது. மரங்களை அரவணைத்து
மரம் இயற்கையைப் பாதுகாப்போம் எனும் கோஷங்கள் மகாத்மா காந்தியை
முன்மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்டது. மரம் நடுதலும், இயற்கைப்
பராமரித்தலும் மிகவும் அவசியம்.

சைக்கிள் போன்ற வாகனங்களையோ, மின் வாகனங்களையோ இயக்குவதன் மூலம் ஒரு
வருடத்திற்கு 16,000 பவுண்ட் கரியமில வாயுவை பூமியில் கலக்காமல்
தடுக்கலாம். வாகனம் வாங்கும்போது அதிக மைலேஜ் கிடைக்கக் கூடிய
வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் சுற்றுப் புறத்தில் கரியமில
வாயுவின் அளவைக் குறைக்க முடியும்.வாகனத்தைச் சரியாகப் பராமரிப்பதன்
மூலமும் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும். வாகன சக்கரங்களைச் சரியாக
வைத்திருப்பதும், காற்று வடிகட்டியை சரியாகப் பராமரிப்பதும் கூட
வருடத்திற்கு ஆயிரம் பவுண்ட் கரியமில வாயுவைக் குறைக்கிறது.

சரியான புகைச் சோதனை செய்யப்படாத வாகனங்கள் சாலைகளில் செல்ல அரசு
கடுமையான தடை விதிக்க வேண்டும். அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் மட்டும்
ஆண்டுக்கு ஒன்றரை இலட்சம் டன் எடையுள்ள காற்று மாசு இந்த புகைச்சோதனையின்
மூலம் தவிர்க்கப்படுவதாக வாஷிங்டன் எமிஷன் கண்ட் ரோல் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த சட்டம் இந்தியா
போன்ற வளரும் நாடுகளிலும் பிழையின்றிப் பின்பற்ற வேண்டும்.

பொருட்கள் வாங்கும்போது பிளாஸ்டிக் பைகளை விலக்கிவிட்டு, மட்கிப் போகும்
பைகளை உபயோகிப்பதும், குறைந்த அளவு பைகளை உபயோகிப்பதும் சுற்றுப்
புறத்தைப் பாதுகாக்கும். மின் உபகரணங்கள் பயன்படுத்தாத வேளையில் அணைத்து
வைத்திருப்பது கூட காற்றின் மாசைக் கட்டுப்படுத்துகிறது.

கழிவுகளை அழித்து புதிய பொருட்கள் தயாரிக்க முடியுமெனில் அதை
கண்டிப்பாகச் செய்வது மாசுகளை பெருமளவு குறைக்கிறது. பிளாஸ்டிக்,
கண்ணாடி, துணிகள், காகிதம் போன்றவை அழித்து மீண்டும் தயாரிக்க இயலும்.

தண்ணீரை மிகச் சிக்கனமாகச் செலவு செய்யவேண்டும் என்றும் உலகின் எந்த
மூலையில் செலவு செய்யப்படும் ஒரு துளி நீரும் ஒட்டுமொத்த உலகிற்கே
இழப்பாகும் என்றும் உலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உலகையே அச்சுறுத்தும் இந்தப் பிரச்சனையில் தனி மனித ஈடுபாடே ஒரு தீர்வை
நல்கமுடியும். எனவே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செயலாக்கவும்
ஒவ்வொருவரும் முன்வருதல் வேண்டும். அதுவே வருங்கால தலைமுறையினருக்கு
தரமான பூமியை நல்கும்.



PL.SUBRAMANIAN B.E., (M.E), 
HEAD OF THE DEPARTMENT/ ECE, 
SUBRAMANIAN POLYTECHNIC COLLEGE, RAYAVARAM

No comments:

Post a Comment