Friday, September 20, 2013

சேவை



காந்திதேசமென்று
கண்டம் விரியக்கத்தி
கந்தக கலாச்சாரம் மேவும்
கலவர பூமியே

சொந்தம் நீயென்று
சொர்ப்பனத்தில் இருந்தோம்
விந்தைகள் புரிந்து நீ
விளையாடுகிறாய் விற்பனமாய்

வெந்தபுண்ணில்
வேலினைப்பாச்சி
குந்தகம் செய்வதா - உன்
குறுகிய அரசியல்

பந்தயக்குதிரைகளாய்
பாரெல்லாம் அலையும்
நிந்தனை புரிந்துமா
நீ தருகிறாய் ஆயுதம்!

சிந்தை நிறைந்த
சிங்கார ஆட்சியா உன்னிடத்தில்
பந்தயம் போட்டு வெடிக்குது குண்டுகள்
பார்த்துக்கொள் உன்னை

குந்த நிலமுமின்றி
குண்டு மழையினிலே
பந்தம் பல தொலைத்து
பாழான எங்களிடமா? - நாம்

சிந்தும் கண்ணீரின் ஏழ்மை - உனை
சிரிக்க வைக்கிறதா?
சந்தனப் பேழையில் சுதந்திரம்
சயனித்தவனை சாய்த்த பூமியல்லவா

வந்தொருமுறை எம்மேல்
வாரியிறைத்த சேறு - உலக
சந்தி சிரித்துமா
சதியை நீ விடவில்லை- உலகை

முந்தும் முயற்சியிலே
முதுகில் குத்தவும்
சொந்த நலனுக்காய்
சொரணை இழப்பதுவும்

அந்ந அகிம்சா முர்த்திக்கு
அவமானம் என்றுணர் - நல்லைக்
கந்தன் காலடியில் அகிம்சைக்
காவியம் புதுப்பித்த
மைந்தன் தேசமிது
மலை வரினம் பணியாது!

Thanks: தலைத்தீவான்

சேவை





  சேவை

எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என
   எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
    ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
    சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
    அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
   
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
   படிக்கின்ற மணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
   வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
   தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
   திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்

பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
   பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
  நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
  அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
  விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை

சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
   சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
   காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
   பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர்  சேவை–உலக
   மக்களின் வாழ்வுக்குச் செய்திடும்  சேவை

         Thanks:          புலவர் சா இராமாநுசம்

Thursday, September 12, 2013



முதலாம் இராசராச சோழன்

இராசராச சோழன் காலத்தில் சோழ நாடு.1014 C.E.
ஆட்சிக்காலம் கி.பி. 985 - கி.பி. 1012
title இராசகேசரி
தலைநகரம் தஞ்சாவூர்
அரசி உலக மாதேவியார்
வானவன் மாதேவியார்
சோழ மகாதேவியார்
பிள்ளைகள் இராசேந்திர சோழன்
மாதேவடிகள்
குந்தவை
முன்னவன் உத்தம சோழன்
பின்னவன் இராசேந்திர சோழன்
தந்தை சுந்தர சோழன்
பிறப்பு தெரியவில்லை
இறப்பு கி.பி. 1014
முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராச ராச சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.
 இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராஜராஜன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது கி.பி 10 மூதல் 12ம் நூற்றாண்டுகளுக்குள்ளேயே கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே(தஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது

Tuesday, September 10, 2013


பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.

கதிரவ னுடனே பிறந்த போதும்
கறுப்பில் முழுகிக் கிடக்கும் சில நாள்-
முகிலின் நடுவே பிறந்து வந்து
மழையாய்க் கண்ணீர் பொழியும் சில நாள்-
கீழை வானச் சிவப்பில் குளித்து
தகதக தகவென ஜொலிக்கும் சில நாள்-
பசுமை எழிலில் தானும் தோய்ந்து
புன்னகை மிளிர வலம்வரும் சில நாள்-
நீல வானைக் கையில் ஏந்தி
நேசக் கரத்தை நீட்டும் சில நாள்-
அமைதி யென்னும் விளக்கைக் கொண்டு
ஆனந்த ஒளியை ஊட்டும் சில நாள்-

ஒவ்வொரு நொடியும் பின்னிப் பிணைந்து
இணைந்தே நடக்கப் பிடிக்கும் சில நாள்-
முழுக்க முழுக்கத் தவிர்த்துத் தனியே
துவண்டு கிடக்க, கடக்கும் சிலநாள்-

பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.
வளரும் அன்பில் நிறங்கள் மாறும்
நாள் ஒவ்வொன்றிலும் நலமே சேரும்.

Thanks : --கவிநயா