Tuesday, April 11, 2017

நகரத்தார் திருமணம்

 நகரத்தார் திருமணம் 



செட்டிநாட்டுத் திருமணங்களில் சில சிறப்புகள் உண்டு. சீர்வரிசை சாமான்கள், செட்டிநாட்டு சமையல் போன்றவை ஸ்பெஷல் . இதில் மாப்பிள்ளை சாமான், பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டில் பரப்பும் சாமான், மாமியார் சாமான், பெண்ணுக்குத் தாய்வீட்டில் செய்யும் சீர்வரிசை சாமான் என நிறைய உண்டு. அதேபோல்  காலை, மதியம், மாலை, இரவு என வகைவகையான வண்ணமயமான ருசியான உணவுகள் உண்டு. பொதுவாக பெண்ணுக்குத் தாய் வீடு கொடுக்கும் சீர் வரிசையில் ( வசதிக்கேற்றபடி ) குண்டூசியில் இருந்து கப்பல் வரை வைப்பார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. 


திருமணத்தை இந்த நாட்களில்தான் பதிவு செய்கின்றோம். ஆதி காலம்தொட்டே திருமணத்தைப் பதிவு செய்து இசை குடிமானம் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள் நகரத்தார்.


நகரத்தார் திருமணம் முதலில் பெண் பார்த்தலில் ஆரம்பிக்கிறது. பெண் பார்த்துப் பேசி முறைச்சிட்டை எழுதிக் கொள்வதை ”கெட்டி பண்ணிக் கொள்ளுதல்” என்பார்கள். ஐயரிடம் திருமணத்துக்கான நாள் தேதி குறித்து சம்மந்தப்புரம் இருவரும் பேசி முடித்துக் கொள்வார்கள்.


அந்தக் காலங்களில் ஒரு வாரம் கொண்டாடப்பட்ட திருமணம் இன்று ஒரு நாளில் முடிந்து விடுகிறது. முகூர்த்தக் கால் ஊன்றியவுடன்  நடுவீட்டில் கோலமிட்டு  வெள்ளிச் சட்டியில்தேங்காய் பழம் வைத்து  அப்பத்தா, ஐயா, ஆயா, ஐயா, அத்தைகள் ஆகியோருக்கும்  மற்ற நெருங்கிய உறவினருக்கும் கல்யாணம்  சொல்லுவார்கள். வெளியூரில் இருப்பவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும்.


அவரவர் கோயிலில் ( நகரத்தாருக்குள் 9 கோயில்கள் உண்டு ). பாக்கு வைத்து  திருமணத்தைப் பதியக் கோருவார்கள். திருமணமானவுடன் அவர்கள் அந்தக் கோயிலின் புள்ளிகள் ஆகிவிடுவார்கள். திருமணத்துக்கு பிரசாதமும்  மாலையும் அனுப்பி வைக்கப்படும். அதை அணிவித்தபின் தான் திருப்பூட்டுவார்கள்.


திருமணத்துக்கு முதல்நாள் பெண் வீட்டாரிடம் இருந்து மனகோலம், முறுக்குவடை, அதிரசம், டயர் முறுக்கு, மாவுருண்டை, தேன்குழல் போன்ற பலகாரங்கள் வரும். அதை உறவினர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்வார்கள். உறவினர் அனைவரும் கூடி ஆக்கி உண்பார்கள்.  4 வேளையும் பலகாரம், சாப்பாடு அமர்க்களமாக இருக்கும். மாலைப் பலகாரத்தை இடவேளைப் பலகாரம் என்பார்கள்.


முதல் நாள் மாப்பிள்ளைக்குத் தாய்மாமன் மிஞ்சி  ( கால் மோதிரம் ) அணிவிப்பார். அதன் பின் திருமணம் முடிந்தபின் தான் மாப்பிள்ளை வெளியே செல்ல முடியும்.    நாதஸ்வர மேளக்காரர்கள் வந்ததும் மாலையில் சிறிது நேரம் கொழுமி மேளம் இசைப்பார்கள்.  வண்ணார் வந்து மணவறையின் பக்கம் நீலமாத்துக் கட்டுவார்.  கல்யாணக் கொட்டகை அலங்கரிக்கப்படும்.


கழுத்துருவுக்குப் பொன் தட்ட பொற்கொல்லர் வருவார். திருமணம் செய்ய நகரத்தார் கழுத்துரு என்ற திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில் கோர்த்துக் கட்டுவார்கள். மொத்தம் 36 உருப்படி இருக்கும். இதைப் பெண் வீட்டில் வாங்கப் போவார்கள். 


கழுத்துருவைக் கொடுக்க மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்லும் ஆண்களுடன் சில பெண்கள் சென்று  மாப்பிள்ளைக்குத் திருமணத்துக்கு வழங்கும் பொருட்களைப் பரப்புவார்கள். இதில் கைக்குட்டையில் இருந்து உள்ளாடைகள், சட்டை, பாண்டுகளும், செண்ட், சோப், காஸ்மெடிக்ஸ்,  ரேடியோ, டிவி, டேபிள் சேர், கெடிகாரம், குடை, செருப்பு, சூட்கேசுகள்,  இவை பலஜோடிகள் வைப்பார்கள்.

அதே போல் மாப்பிள்ளை வீட்டில் பெண்ணுக்கு ( வசதிக்கேற்றபடி ) 11 பட்டுச் சேலைகள், மற்ற புடவைகள் 16, ரவிக்கைகள், சூடிதார்கள், நைட்டிகள், உள்ளாடைகள், கைக்குட்டைகள், ஹேர்பாண்டுகள், சில்வர் தண்ணீர் ட்ரம், கப்புகள், செருப்புகள், கைப்பைகள், விதம் விதமான பொட்டுகள், க்ளிப்புகள், சூட்கேசுகள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, மேக்கப் பொருட்கள், ப்ரஷ், பேஸ்ட்,  பாடி ஸ்பிரே, செண்டுகள் இவை தவிர வெள்ளியில் ஒரு பாத்திரம், ( வேவுக்கடகம், குடம், மிட்டாய்த் தட்டு, மாவிளக்குச் சட்டி போன்றவற்றில் ஒன்று -- சுமாராய் 1/2 கிலோவிலிருந்து இருக்கும் ) தங்க நகை செட் ஒன்று - இதில் காதணிகள், நெக்லெஸ், தோடு இருக்கும். மிகுந்த வசதி படைத்தோர் வைர செட் ஒன்று வைப்பார்கள். இன்னும் பவளம், முத்து, நவரத்தினம் என்று செட்டு செட்டாக நகை வைப்பார்கள்.


இதே போல பெண் வீட்டில் மாமியாருக்கு சாமான் வைப்பார்கள். அதில் பொங்கல் தவலை , அடுப்பு ( இப்போது காஸ் அடுப்பு ) , கோலக்கூட்டு, சம்புடங்கள் என்று இருக்கும்.


இதில் பெண்ணுக்குத் தாய்வீட்டில் தரும் சீதனங்கள்தான் மிக அதிக அளவில் இருக்கும் . வகை வகையாய் சாமான்கள் வைப்பார்கள். வைர நகைகள் , தங்க நகைகள், ரொக்கம் எல்லாம் பேசி முடிவு செய்தபடி கொடுப்பார்கள் .


இதில் ஸ்ரீதனப் பணம் என்று பெண்ணுக்கு  ஒரு பங்கும், மாமியாருக்கு என்று ஒரு பங்கும் இந்த வரதட்சணையில் இடம் பெறும். பெண்ணுக்கான பணத்தைப் பெண், மாப்பிள்ளை பெயரிலேயே டெப்பாசிட் செய்து விடுவார்கள்.


வைர நகைகளில் தோடு , மூக்குத்தி, பூச்சரம்/கண்டசரம்/ மங்கலச் சரம் என்று சொல்லப்படக்கூடிய நெக்லெஸ் ஒன்று, வைரக் காப்புகள், வைர ப்ரேஸ்லெட்டுகள், வைர மோதிரங்கள் போடுவார்கள். தங்கத்தில் வீட்டுக்குப் போடும் செட் ஒன்றும் வெளியே போக விஷேஷங்களில் போட என்று பெரிய செட் ஒன்றும் போடுவார்கள்.
இது போக வெள்ளிச் சாமான்கள், எவர் சில்வர் சாமான்கள், வெண்கலச் சாமான்கள் ( பித்தளை), சிலோன், பர்மா, மைடான் மங்குச் சாமான்கள் ,  ஜெருமன் சாமான்கள் ( அலுமினியம் ), செம்புச் சாமான்கள், அலமாரி, பீரோ , கட்டில் போன்ற மரச்சாமான்கள்,  இரும்புச் சாமான்கள், தகரங்கள், பீங்கான் ஜாடிகள், குழுதாடிகள், கண்ணாடிச் சாமான்கள், ப்ளாஸ்டிக் ரப்பர் சாமான்கள், பின்னிய துண்டுகள், பைகள், தலையணைகள், மெத்தைகள், பர்மா பாய்கள், அன்னக் கூடைகள், மாக்கல், மர விளையாட்டுச் சாமான்கள் , மரவைகள், திருகை, அம்மி, ஆட்டுக்கல் போன்ற கல்சாமான்கள் பரப்புவார்கள்.


இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றாற்போல டிவி, பிரிட்ஜ், வாஷிங்க் மெஷின், டிவிடி ப்ளேயர், சோஃபா செட்டுகள், ( சிலருக்கு வீடு, மனை போன்றவையும் கொடுக்கிறார்கள் . ). க்ரைண்டர் , மிக்ஸி, கட்டில், மைக்ரோவேவ் ஓவன், டைனிங் டேபிள் , ட்ரெஸ்ஸிங் டேபிள், டப்பர்வேர் பொருட்கள், நான்ஸ்டிக் பொருட்கள் ஆகியவை கொடுக்கிறார்கள். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் தனித்தனியாகப் பேர் உண்டு.அதே போல் ஒவ்வொரு பாத்திரத்திலும் பெண்ணின் தகப்பனாரின் பெயரின் முதல் எழுத்தையும் பெண்ணின் பெயரில் முதல் எழுத்தையும் பெயர் வெட்டிக் கொடுப்பார்கள்.


முதல் நாள் இரவு பங்காளி வீட்டுப் பெண்கள் நடுவீட்டுக் கோலம்,  நிலைவாசல் கோலம் மணவறைக் கோலம் இடுவார்கள். ஆண்கள் அரசாணைக்கால் ஊன்றி கிலுவைக் கம்பும் பாலைக் குச்சியும் கட்டி அதன் முன்  மணை போடுவார்கள்.  கழுத்துருவைக் கோர்ப்பார்கள்.


மறுநாள் காலை ஐயரைக் கூப்பிட்டு பெண்ணைக் காவல் காக்கும் பூரம் என்னும் தெய்வத்திடம் பெண்ணைக் காக்க மணமகன் வருவதாக் கூறிக் கழிப்பார்கள். அதன் பின் தாய்மாமன்  காப்புக் கட்டுவார். மூத்த பிள்ளை திருமணமாக இருந்தால் மாம வேவு என்று ஆயா வீட்டுச் சீர் செய்வார்கள்.


பக்கத்துக் கோயிலில் இருந்து மாப்பிள்ளைக்கு தங்க கைக்கெடிகாரம், கைச்சங்கிலி, கழுத்துச் சங்கிலி, மோதிரம் ( இவை வசதி பொறுத்து வைரத்திலும் இருக்கும் ) அணிவித்து மாலை பூச்செண்டு கொடுத்து மாப்பிள்ளை அழைப்பார்கள். ஸ்லேட்டு  விளக்கு வைத்து அழகு ஆலத்தி எடுத்து வீட்டு வாசலில் பெண் எடுக்கிக் காண்பிப்பார்கள். ( அந்தக் காலத்தில் பெண் அவ்வளவு சின்னக் குழந்தையாக இருந்ததால்  இடுப்பில் எடுக்கிக் காண்பிப்பார்களாம். )


மணவறையில் மாப்பிள்ளையின் உறவினர்கள் பகவணம் செய்ய ( பாலில் போட்ட பூவால் அர்ச்சித்தல்)   மாப்பிள்ளையின் தாய் மாமன் மாப்பிள்ளைக்குக்  காப்புக் கட்டுவார்.  ( இரண்டு நாட்களுக்கு முன்பே ஊறவைத்த  நவதானியங்கள்  முளைவிட்டிருக்கும். இதை முளைப்பாரி என்பார்கள். இதை ) அரசாணிக்காலில் முளைப்பாரியை எடுத்துப் போடுவார்கள்.


பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வந்த சீதனப் பட்டைக் கட்டித் திருப்பூட்டுவார்கள். இதில் மணவறையில் பெண் மணவறைப் பலகையில் கிழக்குப் பார்த்து நிற்க மணமகன் கீழே நின்று திருப்பூட்டுவார். முதலில் பெண்ணுக்கு அவரவர்  நகரக் கோயிலிலிருந்து வந்த விபூதி, குங்குமத்தை வைத்து  கோயில் மாலையைப் போட்டு பின் கழுத்துருவைக் கட்டுவார். இதில் இரு முடிச்சுக்கள் அவர் போட மூன்றாம் முடிச்சை நாத்தனார் அல்லது மாமியார் போடுவார்கள்.


பின் மணவறைச் சடங்கை மாமியார் , நாத்தனார் செய்து கொள்வார்கள். இதில் சடங்குத்தட்டு, நிறைநாழி, கத்திரிக்காய், சிலேட்டு விளக்கு,  குழவி ( குலம் வாழும் பிள்ளை ) போன்றவை வைத்து சடங்கு செய்வார்கள். பின் கல்யாண வேவு எடுப்பார்கள்.  இது வேவுக்கடகாம் என்ற பாத்திரத்தில் நெல் அரிசி வைத்து எடுக்கப்படும். பொதுவாக திருமணத்தில் உபயோகிக்கப்படும் இந்தப் பொருட்கள் எல்லாமே வெள்ளியில் இருக்கும்.


இதன் பின் பங்காளிகள் பால் சட்டி வைத்து பணத்திருப்பேடு ( வருகைப் பதிவு ) எழுதுவார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால் மாப்பிள்ளை பெண்ணின் அப்பத்தா வீட்டு ஐயாக்களோ அல்லது தகப்பனார்களோ இந்தத் திருமணத்தைப் பதிவு செய்து இசைகுடிமானம் என்ற பத்திரத்தில் கையெழுத்திட்டுப் பதிவு செய்து ஒருவருக்கொருவர் மாற்றி வைத்துக் கொள்வார்கள்.


மாப்பிள்ளையும் பெண்ணும் மாமக்காரருடன் மணவறையைச் சுற்றி வந்து கோட்டையைக் கடந்து ( நெல் வைத்து வைக்கோல் பிரியால் சுற்றிய பை ) சாமிவீட்டுக்குள் சென்று சாமியை வணங்கி வருவார்கள். மாப்பிள்ளையுடன் மாப்பிள்ளைத் தோழர் ஒருவர் வள்ளுவப்பை என்ற ஒன்றை வைத்திருப்பார்.
திரைசீலையில் முடிதல், மாப்பிள்ளைக்கு சாப்பாடு போடுதல், ஐயர் செய்யும் மணவறைச் சடங்குகள், மஞ்சள் நீராடுதல், காப்புக் கழட்டிக் கால்மோதிரம் இடுதல் ஆகியன நடைபெறும்.


திருப்பூட்டியவுடன் அனைவரையும் வணங்கி வருவார்கள் மணமக்கள். இதன் பின்  கும்பிட்டுக் கட்டிக் கொள்ளுதல் என்று அனைவரிடமும் கும்பிட்டு விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார்கள்.  அதன் பின் குலம் வாழும்பிள்ளையைக் கொடுத்துவாங்கிக் கொள்வார் மணப் பெண். பின் சொல்லிக் கொள்ளுதல். அதன் பின் பெண்ணழைத்து விடுதல் நடைபெறும்.
மாப்பிள்ளை வீடு வெளியூரில் இருந்தால் கட்டுச் சோறு கட்டி அதை ஒரு ஊரணிக்கரை அல்லது குளக்கரையில் உண்பார்கள். மாப்பிள்ளை வீட்டில்  மாலையில் பெண்ணழைத்துக் கொள்வார்கள் . அங்கேயும் குடத்தில் குலம் வாழும் பிள்ளையை எடுத்து மாப்பிள்ளை பெண்ணின் கையில் கொடுக்கவேண்டும். அதன் பின் பெண்ணழைத்த சடங்கு செய்வார்கள். அதன்பின் பெண் வீட்டுக்காரர்கள் சொல்லிக் கொள்வார்கள்.


மறுநாள் படைப்பு, குச்சி தும்பு துவாலை கட்டல், முதல் வழி, மறு வழி, பால்பழம் சாப்பிடுதல் , குலதெய்வம் கும்பிடுதல் என அனைத்தும் நடைபெறும்.


செட்டி நாட்டுத் திருமணங்கள் பொதுவாக வீடுகளிலேயே நடைபெறும். சமுக்காளம் , பந்திப்பாய், சடப்பிரம்பாய், காசாணி அண்டாக்கள் , மற்ற புழங்கும் பித்தளை, சில்வர் சாமான்கள் அனைத்தும் வீடுகளிலேயே இருக்கும். முகப்பு, பட்டாலை, பத்தி, பட்டாலை, வளவு, ஆல்வீடு, இரண்டாம்கட்டு அடுப்படி, மூன்றாம்கட்டு என வீடுகள் இருப்பதால் எவ்வளவு கூட்டம் வந்தாலும் தாங்கும்.


சீர் சாமான்களில் குண்டூசியில் இருந்து கப்பல் வரை வைப்பார்கள். மேலும் சாப்பாடு என்றால் அது செட்டிநாட்டுச் சாப்பாடுதான் சிறந்தது. வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், ஆப்பம், பால் பணியாரம், மசாலைச் சீயம், இனிப்புச் சீயம், கவுனி அரிசி, பாதாம் அல்வா, தம்புருட் அல்வா, ஃப்ரூட் புட்டிங், வறுத்த முந்திரி, முந்திரி பக்கோடா, வெங்காயக் கோஸ், அவியல், சாம்பார்,  டாங்கர் சட்னி, மண்டி, தென்னம்பாளைப் பொடிமாஸ், இளநீர்/ ரோஜாப்பூ ரசம், சுண்டைக்காய்/ பேபிகார்ன்/ காலிஃப்ளவர் சூப், கருவேப்பிலை சாதம், கொத்துமல்லி சாதம், புலவு, காளான் மசாலா, இங்கிலீஷ் காய்கறி பிரட்டல், துவட்டல், கூட்டு, பாலாடைக்கட்டி குருமா, கொத்துப் புரோட்டா, மசாலா நூடுல்ஸ், தக்காளிக்குழம்பு, காய்கறி ( கருவாட்டுக் ) குழம்பு, மிளகுக் குழம்பு, கத்திரிக்காய் கெட்டிக் குழம்பு, மாம்பழ சாம்பார்,  குறுவை அரிசிப் பாயாசம், பாதமாம்கீர், பழப்பாயாசம், அக்கார வடிசல் ஆகிய ஸ்பெஷல் ஐட்டங்கள் இடம் பெறும்.


திருமணத்தை ஆதி காலம் தொட்டே பதிவு செய்தவர்கள் மட்டுமல்ல. திருமணச் சடங்குகளில் எல்லா சாதியினரின் ( ஐயர், நாவிதர், வண்ணார், பண்டாரம், குலதெய்வக் கோயில் வேளார், )ஒத்துழைப்பையும் பெற்று சிறப்புறச் செய்தவர்களும் இவர்களே.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை ஜூன் 1, 2013 நம் தோழியில் வெளிவந்தது.  

No comments:

Post a Comment