Sunday, December 25, 2016

மார்கழி மாத முக்கிய விரத வழிபாட்டு நாட்கள்...!



1. அனுமன் ஜெயந்தி...28/12/2016
2. வைகுண்ட ஏகாதசி.. 08/01/2017
3. திருவாதிரைத் திருநாள் ( ஆருத்ரா தரிசனம் ). .11/01/2017

1. அனுமன் ஜெயந்தி...28/12/2016

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் வாயுதேவனுக்கும், அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் ஆஞ்சநேயர் அனுமன். ஏதேனும் ஒரு நல்ல காரியம் நிறைவேற வேண்டும் என்று அனுமனைப் பிரார்த்திக்க வேண்டும். ராம நாமத்தைக் கூறியவாறே வாலின் தொடக்கத்தில் ஒரு குங்குமப் பொட்டை இட வேண்டும்.
தினமும் இவ்வாறே தொடர்ச்சியாக, இட்டுக் கொண்டு வந்தால், குங்குமப் பொட்டு வரிசை வாலின் நுனிப் பகுதியை அடைவதற்கு முன்னால், அனுமனின் பேரருளால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். அனுமனை வழிபடுகின்றவர்களுக்கு அவர் புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்கு வன்மை ஆகியவற்றை அருளுகின்றார். இது காஞ்சி மகா பெரியவரின் அருள்வாக்கு.

2.வைகுண்ட ஏகாதசி.. 08/01/2017

மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதமிருக்க வேண்டும். துளசி தீர்த்தம் தவிர வேறு எதையும் உண்ணவும், பருகவும் கூடாது.
இரவு முழுவதும் சோர்வில்லாமல் கண் விழித்து, பரந்தாமனைப் போற்றும் பக்திப் பாடல்களைப் பாடலாம். பரதபதம் பெறுவதற்காக பரம பதமும் ஆடலாம். மறுநாள் துவாதசி அன்று விஷ்ணுவை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
சொர்க்கவாசல்........
வைகுண்ட ஏகாதசியன்று, ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில் வைணவக் கோவில்கள் அனைத்திலும் சொர்க்கவாசல் திறப்பது, ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறந்ததாக மதிக்கப்படுகிறது. எனவே, `காயத்திரியை விடச் சிறந்த மந்திரமில்லை, தாயை விடச் சிறந்த தெய்வமில்லை, ஏகாதசியை விடச் சிறந்த விரதமில்லை' என்ற வழக்கும் ஏற்பட்டது.

3.. திருவாதிரைத் திருநாள்....( ஆருத்ரா தரிசனம் ). ....11/01/2017

மார்கழி பவுர்ணமியுடன் திருவாதிரை நட்சத்திரம் பொருந்தும் நாளே திருவாதிரைத் திருநாள். அன்றைய நாளில் சிதம்பரம்-தில்லை நடராஜனைத் தரிசிக்கும் தரிசனத்தை ஆருத்ரா தரிசனம் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். திருவாதிரைத் திருநாளன்று இறைவனின் முன் களி நிவேதனம் செய்கின்றனர். ஏழு காய்கறிகளைக் கலந்து செய்யும் கூட்டைத் திருவாதிரைக் கூட்டு என்று அழைக்கின்றனர்.

ஜெய் ஸ்ரீராம்

ஓம் நமோ நாராயணாய

ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment