Saturday, September 24, 2016

கவிஞர் தாராபாரதியின் கவிதை

வேலைகளல்ல  வேள்விகளே ..............!

மூலையில் கிடக்கும் வாலிபனே-தினம் 
முதுகில் வேலையைத் தேடுகிறாய்
பாலை வனந்தான்  வாழ்க்கையென- வெறும் 
பல்லவி எதற்குப் பாடுகிறாய் 

விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள் 
வேங்கைப் புலிநீ தூங்குவதா?
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று 
எங்கே கிழக்கெனத் தேடுவதா?

விழிவிழி உன்விழி நெருப்பு விழி -உன் 
விழிமுன் சூரியன்  சின்னப் பொறி 
எழு எழு தோழா உன் எழுச்சி -இனி 
இயற்கை மடியில் பெரும்புரட்சி 

நீட்டிப்  படுத்தால் பூமிப்பந்தில்
நீதான் பூமத் தியரேகை-நீ 
போட்டுக் கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்தான் 
பூமி வலம் வரும் புதுப் பாதை 

வெறுங்கை என்பது மூடத்தனம்-உன் 
விரல்கள் பத்தும் மூலதனம் 
கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும்-உன் 
கைகளில் பூமி சுழன்று வரும்

கட்டை விரலை விடவும் இமயம்
குட்டை என்பதை எடுத்து சொல் 
சுட்டு விரலின் சுகமாய் வானம் 
சுருங்கினதென்று முழக்கிச் செல்

தோள்கள் உனது தொழிற்சாலை -நீ
தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை 
தோல்விகள்  ஏதும் உனக்கில்லை-இனி 
தொடு வானம்தான் உன் எல்லை

கால்கள் கீறிய கோடுகள் வழியே
கங்கையும் சிந்துவும் ஓடி  வரும்-உன் 
தோல்க ளிரெண்டும் தெற்கு வடக்காய்-
துருவங் களுக்குப்  பாலமிடும்

மண்புழு அல்ல மானிடனே - நீ
மாவலி காட்டு வானிடமே!
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே-இவை 
வேலை களல்ல வேள்விகளே!


Read more: http://www.tnmurali.com/2013/07/tharabarathi-kavithai-verunkai-enbadhu-moodathanam.html#ixzz4LACzOM32

No comments:

Post a Comment