Monday, August 5, 2013

1000 மரங்களுக்கு மேல் நட்ட சமுதாய சிற்பிஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வேலுச்சாமி !




எதிர்காலத் தலைமுறையினருக்காக 1000 மரங்களுக்கு மேல் நட்ட சமுதாய சிற்பி!

தள்ளாத வயதிலும் சமுதாயத்துக்கான தனது பங்களிப்பைத் தவறாமல் செய்யும் முதியவரால், ஒரு கிராமமே அழகு பெற்றிருக்கிறது. திருப்பூரிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது செலக்கரிச்சல் கிராமம். ஊருக்குள் எங்கு பார்த்தாலும், பல வகையான மரங்கள் நிழல் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த கிராமமே பச்சைப் பசேல் என அழகு மிகுந்து காட்சியளிக்கிறது. இத்தனைக்கும் காரணம், 78 வயதான, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வேலுச்சாமி என்ற தனி மனிதர்.

தனது நண்பர் பழனியோடு இணைந்து, அந்த கிராமத்தில் மரக்கன்று நடும் பணி, கால்நடைகளிடம் இருந்து மரக்கன்றுகளைக் காக்க தடுப்பு வளையம் அமைப்பது என அனைத்து பணிகளையும் செய்கிறார். சைக்கிளில் நீர் கொண்டு சென்று தினமும் செடிகளுக்கு ஊற்றிப் பராமரிக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் சுமார் ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டு வளர்த்திருக்கிறார். மரத்தைச் சேதப்படுத்துவதை அறிந்தால், அவர்களைத் தடுத்து நிறுத்தப் புறப்பட்டுவிடுகிறார்.

எதிர்காலத் தலைமுறையினருக்கு மரங்கள் அவசியம் எனக் கருதிய வேலுச்சாமியால் மட்டுமே, இந்த கிராமம், மரங்கள் நிறைந்த, குளிர்ச்சியான பகுதியாகக் காட்சியளிக்கிறது. பறவைகளுக்குச் சரணாலயமாகவும் மாறியிருக்கிறது.பிரதிபலன் பாராமல் அடுத்த தலைமுறையினருக்காகப் பணியாற்றும் வேலுச்சாமியைப் பின்பற்ற வேண்டிய கடமை இளைய தலைமுறையிருக்கு உண்டு. முதிர்ந்த வயதிலும், சமுதாயத்துக்குத் தன்னாலான பணிகளைச் செய்யும் வேலுச்சாமி சமுதாயச் சிற்பியே. புதிய தலைமுறைக்காக செய்தியாளர் தமிழரசியுடன் ஜெய்சங்கர்.

நன்றி: புதிய தலைமுறை

No comments:

Post a Comment