பிறந்தவர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்பது விதி. மரணத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. மரணத்திற்கு பல காரண காரியங்கள் இருக்கிறது. ஆனால் பொதுவாக பெருவாரியான உயிர்கள் உடலை விட்டு பிரிந்து போவதற்கு எது காரணமாக இருக்கிறது என்பதை பற்றி நம்மில் பலர் சிந்திப்பது கிடையாது. ஆற்றில், குளத்தில் விழுந்து சாகிறவன் விபத்துகளில் இறந்து போகிறவர்கள், படுகொலை செய்யப்படுபவர்கள் இவர்களுடைய உயிர் எதனால் பிரிகிறது என்பது ஓரளவு நமக்கு தெரியும். ஆனால் நோய்பட்டு இறப்பவர்களுடைய உயிர் எதனால் போகிறது என்று கேட்டால் அதற்கு ஒரே பதில் கபம் என்ற சளியால் போகிறது என்று மட்டும் தான் கூறமுடியும். ஒருவருக்கு இதய நோய் வரலாம், புற்றுநோய் வரலாம் வேறு எந்தவிதமான நோய்களும் வரலாம். இந்த நோய்களின் இறுதி வடிவம் அதாவது உயிரை பறிக்கும் நிலை கப வடிவம் என்று தான் கூறவேண்டும்.
அதனால் தான் சித்தர்கள் நுரையீரலில் உருவாகும் கோழையை யமன் என்ற பெயரில் அழைத்தார்கள். உடம்பில் சளியானது சேர சேர உடல் இயக்கம் குறைகிறது. இரத்த ஓட்டம் தடைபடுகிறது. எலும்புகள் வலுவிழக்கிறது. நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் நடமாடும் பிணமாக மனிதன் ஆகிவிடுகிறான். எனவே சளித்தொல்லை இல்லாமல் வாழுகிற மனிதன் தான் நிஜமான ஐஸ்வர்யவனாவான் எனலாம். இந்த சளித்தொல்லையை முற்றிலுமாக நீக்குவதற்கு சித்தர்கள் கபசுத்தி என்ற பெயர் கொடுத்து கரிசாலை நெய் என்ற அற்புதமான மருந்தையும் கூறி இருக்கிறார்கள். கரிசாலை நெய்யை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லலாம் சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் என்றால் அது மிகையில்லை.
இந்த நெய்யை சற்று முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம். கரிசலாங்கண்ணி கீரையை வேரோடு பிடுங்கி வந்து நன்றாக கழுவி அம்மியில் வைத்து அரைக்க வேண்டும். இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய பகுதி கீரையை அம்மியில் அரைக்க வேண்டுமே தவிர நமது சவுகரியத்திற்காக மிக்ஸியில் போட்டு அரைக்ககூடாது. கையின் வேகத்திற்கு கல் சுழன்று வந்து அரைத்தால் அரைபடும் பொருளின் இயற்கை தன்மை கெடுவதில்லை. மின்சார இயந்திரத்தின் அதீத வேகத்தில் அரைபடும் பொருளின் ஜீவன் போய்விடுகிறது. சக்கை மட்டுமே மிஞ்சுகிறது. இதற்கு உதாரணமாக சொல்வது என்றால், கையால் அரைக்கும் தேங்காய் சட்டினி சுவையும், மிக்ஸியில் அரைக்கும் சட்டினியின் சுவையும் ஒப்பிட்டாலே போதுமானது.
அரைக்கப்பட்ட கீரை விழுதை உருண்டையாக பிடித்தால் ஒரு தேங்காய் அளவு வரவேண்டும். அதாவது அந்த அளவிற்கு கீரை தேவை இந்த விழுதை சுத்தமான பசுநெய்யில் போட்டு கலக்கி ஐந்துகிராம் அளவிற்கு சீனி காரத்தை போட்டு விறகு அடுப்பில் ஏற்றி மிதமான நெருப்பில் மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி பத்திரபடுத்தி கொள்ள வேண்டும். இந்த மெழுகை சூரியன் உதிக்கும் முன் எழுந்து வலது கை பெருவிரலால் தொட்டு வாயை நன்றாக திறந்து உள்நாக்கில் பின்புறம் உள்ள மேல்நோக்கி அமைந்த துவாரத்தில் தடவி அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் ஊர்த்துவ நாடி, சுழுமுனை நாடி என்றெல்லாம் சித்தர்களால் சொல்லப்படும் சூட்சம நாடிக்குள் அடங்கி கிடக்கும் கோழை நூல் நூலாக வெளியே வந்து விழும். இப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து செய்தால் உடம்பில் உள்ள தேவையற்ற சளி வெளியேறி, ஆரோக்கியமான நுரையீரல் உடல் முழுவதும் நல்ல பிராணக்காற்றை தரும். இந்த முறையை மூன்று வருடத்திற்கு ஒருமுறை செய்து வரவேண்டும். இத்தோடு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பேதிக்கு மருந்து உண்டு குடலை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.
இவைகள் தான் தினசரி நமது உடம்பை பராமரிக்க சித்தர்கள் கூறிய நித்திய சுத்தி என்ற காயசித்தி முறையாகும்.
No comments:
Post a Comment