நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பெற்றவை. ஆனால் நம் தலைமுறை அதைச் சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, தமிழர்களின் கலாச்சாரங்களில் ஒன்று, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்பெறும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்பெறுவதில்லை.
ஓவ்வொரு நல்ல காரியம் நடந்தாலும் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்பர். திருமணம், பிறந்த குழந்தையை வீட்டிற்கு வரவேற்பது என அனைத்துச் சுப காரியங்களிலும் ஆரத்தி இடம்பிடித்திருக்கும்.
ஆரத்தி தமிழர்களிடம் மட்டுமின்றி இந்துக்களின் சாங்கிய சம்பிரதாயங்களிலும் காணலாம். ஆரத்தி எடுப்பது கண் திருஷ்டியைப் போக்குவதற்கு என நம்முடைய பாட்டிமார்கள் சொல்லக் கேட்டிருப்போம்.
சாதாரண நிகழ்வாக இதைப் புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்பெறுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.
ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்துச் சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்துக் கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்குச் சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு முன் 3 முறை சுற்றுவதையே ஆரத்தி என்று கூ றுகின்றோம்.
ஆரத்தி என்றுமே வீட்டின் வாசலில்தான் எடுக்கப்பெறும். பெரும்பாலும் தூரப்பயணம் சென்று வீடு திரும்புகின்றவர்கள், புதுமணத் தம்பதியினர், மகப்பேறு பெற்று வரும் பெண்கள் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கப்பெறும்.
உடலில் இருக்கும் விஷக்கிருமிகளைப் போக்கவே இந்த ஆரத்தி எடுக்கப்பெறுகிறது. மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்குக் கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேணுவதோடு பிறருக்கும் அந்த விஷக்கிருமிகள் பரவாது தடுக்கமுடிகிறது.
இந்த ஆரத்தி எடுப்பதன் முலம் மனிதனின் சூட்சும பகுதியில் விஷக்கிருமிகள் அண்டாமல் தடுக்க இயல்கிறது. மேலும் அவனின் மேல் இருக்கும் கிருமிகள் வீட்டில் இருக்கும் பிறரைப் பாதிக்காமல் தடுக்கவே அவர்கள் வீட்டிற்குள் நுழையும் முன், நுழைவாசலிலேயே இந்த ஆரத்தி எடுக்கப்பெறுகிறது.
நம்முடைய கலை கலாச்சாரங்களில் புதையுண்டு இருக்கும் இந்த அறிவியல் அர்த்தங்கள் அடுத்த சந்ததியினருக்குத் தெரியாமல் காலத்தால் மறந்தும் மறைந்தும் போய்விட்டன.
இலட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய முப்பெரும் தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும்
என்பதற்காகவே இவ்வாறு ஆரத்தி எடுக்கப்பெறுகிறது என்பர். சரஸ்வதியின் நிறம் வெண்மை, இலட்சுமியின் நிறம் மஞ்சள். எனவே, சுண்ணாம்பும் மஞ்சளும், அதாவது வெள்ளையும் மஞ்சளும் கலந்து சிவப்பு என்கிற அதாவது பார்வதி தேவியின் நிறமாக ஆரத்தி உண்டாகிறது. இதனால் கலைமகள், அலைமகள் மற்றும் மலைமகள் அருள் கிடைப்பதாகவும் கண் திருஷ்டி அதாவது கண்ணேறு நீங்குவதாகவும் கருதுவர்.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம் என்று மார்த்தட்டும் முன் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகளின் அர்த்தங்களை முறையாக அறிந்து செயல்படுகிறோமா என்பதை நினைத்துப் பார்ப்போம்! அறிந்து பின்பற்றிப் பெருமிதம் கொள்வோம்.
No comments:
Post a Comment