Friday, November 7, 2014

மகளின் கட்டளைகள்...ஒரு கவிதை.........!

மகளின் கட்டளைகள்...!  
விடுமுறைக்கு
ஊருக்கு வந்த மகள்
அப்பாவை போனில் கூப்பிட்டு
உரக்கச் சொன்னாள்
அப்பா நான் வர்ற வரைக்கும்
மீன் தொட்டி மீன்கள
கவனமாப் பாத்துக்குங்க
அதுங்ககிட்ட
அடிக்கடி பேச்சுக்குடுங்க..
பால்கனிச் செடிக்குத்
தண்ணி ஊத்துங்க
படிக்கட்டு பக்கம்
வர்ற அணிலுக்கு
தானியம் போடுங்க
மாடியில வந்து
உட்கார்ற காக்காவுக்கு
சோறு வைங்க
பாக்காம விட்றாதிங்க..
நாய்க்குட்டிய
வாக்கிங் கூட்டிட்டுப் போங்க
கொஞ்சம் தூரமாப்பா
சின்னதா சுத்திட்டு வரவேணாம்
அப்புறம் ஜன்னலோரத்துல
வந்து உட்கார்ற புறா
அதுவா பறந்து போயிடும்
விரட்டி விட்றாதிங்க
என் டேபிள் மேல
ஒரு யானை
வரைஞ்சி வச்சிருக்கேன்
அத எடுத்து
பத்திரமா உள்ள வைங்க
யானைக்கு ஒரு பேரும்
யோசிச்சு வைங்க..
எல்லாவற்றையும்
பொறுமையாகக்
கேட்டுக்கொண்ட அப்பா
மெல்ல
மகளின் வனத்திற்கு
காவலாளியாக
மாறத் தொடங்கினார்.
*கல்கி இதழில் (20.11.2011) வெளியான கவிதை.

No comments:

Post a Comment